சென்னை: புதுக்கோட்டை வேங்கைவயல் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக சாடிய இயக்குனர் பா.ரஞ்சித், மக்களை சந்திக்க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விரும்பவில்லை என குற்றம் சாட்டினார்.
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் புழங்கும் குடிநீர் டேங்கில் மர்ம நபர்கள் மலத்தை கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுதொடர்பாக காவல்துறை பல்வேறு குழுக்களை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், சமூக வலைதளங்களில், பிரச்சினை ஏற்படுத்த அந்த பகுதி மக்களாலேயே இந்த சம்பவம் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “இச்சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரையில் 70 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மேலும், புதுக்கோட்டை ஆட்சியர் நேரில் சென்றும் நடவடிக்கைகள் மேற்கொண்டார். அந்த குடிநீர் தொட்டி சுத்தப்படுத்தப்பட்டு, அதில் நீரேற்றம் செய்யப்பட்டு, அது சோதிக்கப்பட்டு, மீண்டும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், அப்பகுதியில் தீண்டாமை தொடர்பான அனைத்து பிரச்சினைகள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கோவிலில் அனைத்து சமூக மக்கள் கலந்து கொண்ட பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் திமுக ஆதரவாளரான இயக்குனர் பா.ரஞ்சித், இந்த விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், “தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்!!
வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.