புதுச்சேரி:
காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் தேர்தல் அறிக்கை இருப்பதாக தெரிவித்த ராகுல்காந்தி, தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும் என்றும், நீட் தேர்வு தேவையா இல்லையா என்பது குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல புதுச்சேரி மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பபடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீட் தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ள ஏழை நடுத்தர மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு நன்றி தெரிவிப்பதாக கூறி உள்ளார்.
மேலும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ராகுல் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது என்றும் கூறி உள்ளார்.