புதுச்சேரி,

புறவாசல் வழியாக 3 பாரதிய ஜனதா கட்சியினரை சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி நியமனம் செய்ததை சபாநாயகர் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக புதுச்சேரியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே நிர்வாக பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக கவர்னர் கிரண்பேடி,  பாரதியஜனதா கட்சியை சேர்ந்த 3 பேருக்கு, நியமன எம்எல்ஏக்கள் பதவி வழங்கி, அவர்களுக்கு ரகசியமாக  பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

புதுவை சட்டசபையில் மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர மாநில அரசின் பரிந்துரையின்பேரில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க முடியும். அதன்படி, மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை கடந்த ஜூலை 4-ந்தேதி கவர்னரை நியமனம் செய்தார்.

புதுவை மாநில பா.ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர்.

அதையடுத்து, அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கும்படி சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கடிதம் அளித்தனர். இந்த கடிதத்தை ஆய்வு செய்து அழைப்பதாக சபாநாயகர் கூறியிருந்தார்.

அதையடுத்து, அன்று இரவே  கவர்னர் கிரண்பேடி அவர்கள் 3 பேரும் பதவி பிரமாணம் செய்து வந்தார். ஆனால், அவர்களை அங்கீகரிக்க சபாநாயகர் மறுத்து வந்தார்.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் வெளிநாடு பறந்துவிட்டார். கடந்த 30-ந்தேதிதான் புதுவை திரும்பினார்.

 

இத்தகைய சூழலில் சட்டசபை செயலகம் இன்று 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இதுகுறித்து சட்டமன்ற செயலர்,  வின்சென்ட ராயர், நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், இந்திய அரசியலமைப்பு சட்டம், புதுவை யூனியன் பிரதேச சட்டம் 1963 ஆகியவற்றிற்கு மாறாக 3 நியமன உறுப்பினர்கள் உரிய அதிகாரம் படைத்த நபரால் நியமிக்கப்படவில்லை. நியமனமே செல்லாது என்ற சூழலில், கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என்பதற்காக உங்களை எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க முடியாது.

எனவே எம்.எல்.ஏ.க்களின் சலுகைகள் கோரிய உங்கள் கோரிக்கைகளை நிராகரிக்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபாநாயகர் வைத்திலிங்கத்தின் உத்தரவின்படி இந்த கடிதத்தை சட்டசபை செயலர் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.