டில்லி,

புதுச்சேரியில் முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் கிரண் பேடி சந்தித்து பேசினார்.

அப்போது ஆளும் காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியதாக கூறப்படுகிறது.

 

புதுவை யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு முதல்வர் நாராயணசாமி  தலைமையில் நடைபெற்று வருகிறது. மாநில கவர்னராக பிஜேபியை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் கிரண்பேடி இருந்து வருகிறார்.

மாநில அரசு அதிகாரத்தில் கவர்னர் மூக்கை நுழைப்பதாக அரசு மட்டுமல்லாது எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால்  தனக்குத்தான் அதிக அதிகாரம் இருக்கிறது என்று கூறி கவர்னர் கிரண்பேடி  அரசு பணிகளில் தலையிட்டு வருகிறார்.

இதன் காரணமாக அதிகாரிகள் யாருடைய உத்தரவுக்கு பணி செய்வது என்று அல்லாடி வருகின்றனர். இவர்களின் மோதல் காரணமாக அரசு பணிகள் பாதிக்கப்படுவதாக இரு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இதன் உச்சக்கட்டமாக கடந்த வாரம் சட்டமன்றத்திலேயே ஆளுநருக்கு முதல்வர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

அதைத்தொடர்ந்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ள டில்லி சென்ற முதல்வர் நாராயணசாமி, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்து கவர்னர் செயல்பாடு குறித்து புகார்  கூறினார்.

மேலும் அவர் ஏற்கனவே பிரதமரிடம் கவர்னர் குறித்து புகார் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து புனேவுக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு பேடியும் டில்லி சென்றார். அவர் இன்று காலை பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார்.

அப்போது முதல்வருக்கும்,  தனக்கும் உள்ள மோதல் குறித்து பிரதமரிடம் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உள்பட சில மத்திய மந்திரிகளையும் சந்திக்க  முடிவு செய்துள்ளார்.

முதல்வரும், கவர்னரும் மாறி மாறி டில்லி சென்று புகார் கூறிவருவது மக்களிடையே நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.