புதுச்சேரி:

புதுச்சேரியில் இன்று முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா சோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனைக்கு வந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூர்த்தி, சோதனை செய்ய வந்த மருத்துவரின் காலில் விழுந்து வணங்கினார். இது தொடர்பான விடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை  8 பேர் கொரோனாவல்  பாதிக்கப்பட்டனர். இவர்களில் மாகியில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போது 3 பேர் மட்டுமே கதிர்காமம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில்,  புதுச்சேரி மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற பணியாளர்களுக்கு இன்று கொரோனா சோதனை நடைபெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் சுகாதாரத்துறை சார்பில் RT-PCR முறையில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.  மாநில முதல்வர் நாராயணசாமிக்கு முதலில் சோதனை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர்கள், எம்எல்எக்களுக்கு சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனைக்கு வந்த அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி,  தனக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்களின் காலில் விழுந்து வணங்கினார். இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கூறிய சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார், சோதனை  முடிவுகள் நாளை வெளியாகும் என  தெரிவித்தார்.