புதுச்சேரி:
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றது.
புதுவை மாநில 15 ஆவது சட்டப்பேரவைக்கான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை எதிரில் நடைபெற்ற விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்று, அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் மற்றும் எம்எல்ஏக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டர்.
புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமார் மற்றும் சந்திரபிரியங்கா ஆகியோரும், பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஏ. நமச்சிவாயம், சாய் ஜெ. சரவணன்குமார் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் 5 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.புதுச்சேரியில் கரோனா விதிகளின்படி மிகுந்த பாதுகாப்புடன் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு, ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.