புதுச்சேரி
இன்று புதுச்சேரி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள், மகளிர், ஆதி திராவிடர் நலம், கல்வித்துறை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார். மேலும் புதிய உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கையில், “விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் மற்றும் சுய உதவிக் குழுவினருக்கு 50% மானியம் வழங்கப்படும். விரைவில் புதிய உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5000 உற்பத்தி மானியமாக வழங்கப்படும்.
ஏற்கனவே மூடப்பட்டுள்ள நியாயவிலைக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. அத்துடன் மக்களுக்கு இலவச அரிசி வழங்க ரூ.197.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கல்வித் து/றைக்கு ரூ.742 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறைக்கு ரூ.296 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாட்கோவில் மாணவர்கள் பெற்றுள்ள கடன்கள் ரத்து செய்யப்படுகின்றன. தவிரக் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது” என அறிவித்துள்ளார்.