புதுச்சேரி

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைப் புதுச்சேரி அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.   தற்போது பாதிப்பு குறைந்து வந்தாலும் முழுமையாக முடிவுக்கு வராமல் உள்ளது.   மேலும் தற்போது ஒமிக்ரான் பரவல் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி ஆகி உள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை உடையது எனக் கூறப்படுகிறது.  இந்த வைரஸ் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களை அதிக அளவில் பாதிக்காது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  இதையொட்டி  நாடெங்கும் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்றாகப் புதுச்சேரி மாநிலத்தில் பொதுச் சுகாதார சட்டம் 1973 பிரிவு 8 மற்றும் 54(1)ன் படி கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.   கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.