புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதை தி.மு.க.,அ.தி.மு.க.ஆகிய இரு கட்சிகளுமே தவிர்த்து விட்டன.
தி.மு.க.தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு புதுச்சேரியை ஒதுக்கி விட-அ.தி.மு.க.வோ- ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரசுக்கு தாரை வார்த்துள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ் ஒன்றும் அ.தி.மு.க.வுக்கு புதிய தோழமை கட்சி அல்ல.ஜெயலலிதா இருந்த போது 2011 –ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரசுடன் இணைந்து அ.தி.மு.க .தேர்தலை சந்தித்தது.போட்டியிட்ட 17 தொகுதிகளில் 15 இடங்களை என்.ஆர்.காங்கிரஸ் வென்றது. 10 இடங்களில் நின்ற அ.தி.மு.க. 5 –ல் மட்டும் ஜெயித்தது.
முதல்-அமைச்சர் பதவி ஏற்ற ரங்கசாமி,அமைச்சரவையில் அ.தி.மு.க.வை சேர்த்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ,அது நடக்கவில்லை.இதனால் அந்த கட்சியுடன் கூட்டணியை முறித்து கொண்டார்,ஜெயலலிதா.
7 ஆண்டுகளுக்கு பிறகு ,இப்போது மீண்டும் அ.தி.மு.க.கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளது,என்.ஆர்.காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்டியிடுவார் என்று தெரிகிறது.கடந்த மக்களவை தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட அவர் ,என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனிடம் தோற்றுப்போனார்.
இந்த முறை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சாத்தியம் உள்ளதால்-மறுபடியும் மந்திரியாகலாம் என்பது –நாராயணசாமியின் கனவு.
அவரை எதிர்த்து பலமான வேட்பாளரை தேர்வு செய்துள்ளார்,ரங்கசாமி.டாக்டர் நாராயணசாமி என்பவர் தான் ,ரங்கசாமியின் –தேர்வு.இவர் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரியின் உரிமையாளர்.
இவரது தந்தை கேசவன்,தி.மு.க.எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.இரண்டு நாராயணசாமிகளுக்கு இடையே கடும் போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
—பாப்பாங்குளம் பாரதி