ரண்டு முறை பிரதமராக இருந்தும்- மக்களவை தேர்தலில் மன்மோகன்சிங் போட்டியிட்ட தில்லை.அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு எம்.பி.ஆனார்.

அவரது பதவிக்காலம் வரும் ஜுன் மாதத்துடன் முடிகிறது. இதற்கு முன்பு அசாம் மாநில சட்டப்பேரவையில்  காங்கிரஸ் பலமாக இருந்தது.

இப்போது மன்மோகன்சிங்கை எம்.பி.யாக தேர்வு செய்யும் அளவுக்கு கங்கிரசுக்கு பலம் இல்லை.

அசாம் கன பரிஷத் மற்றும் ஏ.ஐ.யு.டி.எப்.கட்சிகள் ஆதரவு கொடுத்தால் மட்டுமே அவர் எம்.பி.யாக முடியும்.மன்மோகனுக்கு வாக்களிக்க ஏ.ஐ.டியு.எப்.ரெடியாக உள்ளது.

ஆனால் அண்மைக்காலம் வரை பா.ஜ.க. கூட்டணியில் இருந்து –தற்போது பிரிந்து வந்துள்ள அசாம் கனபரிஷத் நிலை தெளிவாக தெரிய வில்லை.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் அவரை நிறுத்தி லோக்சபா எம்.பி.யாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘’அமிர்தசரசில் பிரச்சாரம் செய்யாமலேயே மன்மோகன்சிங் எளிதில் வெற்றி பெற்று விடுவார் ‘’ என்று காங்கிரசார் அடித்து சொல்கிறார்கள்.

‘’தெருத்தெருவாக சுற்றாவிட்டாலும், சில கூட்டங்களிலாவது கலந்து கொண்டால் தான் நன்றாக இருக்கும்.ஆனால் மன்மோகன் உடல் நிலை அதற்கு ஒத்துழைக்காது’’என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

வேறு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவா? அல்லது அமிர்தசரசில் இருந்து லோக்சபாவா?எப்படி எம்.பி.ஆகலாம் என யோசித்து கொண்டிருக்கிறார்- முன்னாள் பிரதமர்.

—–பாப்பாங்குளம் பாரதி