புதுச்சேரி:
ளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை நடத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் இருந்து ஊதியம் வழங்குகிறோம். அதில் மத்திய அரசின் மானியமும் வருகிறது. அதனால் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மத்திய அதிகாரிகள் வந்துதான் ஊதியம் கொடுக்க வேண்டுமா ? -முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி நகராட்சி கட்டட திறப்பு விழா அழைப்பிதழில் தனது பெயர் போடவில்லை என்பதற்காக இன்று (12.02.2021) நடக்கவிருந்த அரசு விழாவை ரத்து செய்ததுடன், அதற்கு காரணமான அதிகாரி திட்ட முகமை இயக்குநர் அருண் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி. அத்துடன், “நகராட்சி மேரி கட்டட சீரமைப்புக்கு மத்திய அரசு முழு நிதியுதவி தந்தது. குறிப்பாக கரையோர பேரிடர் அபாயக் குறைப்பு திட்டத்தில் ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் மத்திய அரசு ரூ.244 கோடி கடனையும் கரையோர பேரிடர் அபாயக் குறைப்பு திட்டத்துக்கு அளித்திருக்கிறது. அதனால் இந்த கட்டட திறப்பு விழாவுக்கு மத்திய அரசு பிரமுகர்களை அழைத்திருக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “கடற்கரை சாலையில் இருந்த நம்முடைய ‘மேரி கட்டடம்’ சுனாமியால் பாதிக்கப்பட்ட காரணத்தால் பராமரிப்பு பணியின் போது இடிந்து விழுந்தது. அதையடுத்து உலக வங்கியின் நிதி உதவியுடன் புதிய மேரி கட்டடம் கட்டுவதற்காக எங்களுடைய ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது அந்த பணிகள் முடிந்து இன்று கட்டடத்தை திறக்க முடிவு செய்து அதற்காக அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது. அதில் எனது பெயர், அனைத்து அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் நாடாளுமன்ற செயலரின் பெயர்கள் போடப்பட்டது.

அனைத்து மாநிலங்களிலும் கட்டடங்கள் மற்றும் சாலைகள் திறப்பு விழாவுக்கு யாரை அழைக்க வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் முடிவாகும். தங்களை அழைக்க வேண்டும் என்று யாரும் கூற முடியாது. ஆனால் திடீரென நேற்று ஆளுநர் கிரண் பேடி, கடற்கரை பாதுகாப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.14 கோடியில் மேரி கட்டடம் கட்டப்பட்டிருப்பதால், அந்த விழாவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அவர்களின் ஒப்புதலோடு விழாவை நடத்த வேண்டும் என்றும் தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் அவர் அந்த கடிதத்தை அனுப்பியிருக்கிறார். அந்த திட்டத்தில் மத்திய அரசின் நிதி இல்லை. மாநில அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மத்திய அரசு பரிந்துரை செய்து உலக வங்கி கொடுத்த நிதி மூலமாகவே மேரி கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் மானியம் கொடுக்கிறது. அதேபோல், உலக வங்கியும் எல்லா மாநிலங்களுக்கும் நிதி வழங்குகிறார்கள்.

அந்த நிதியில் திட்டத்தை நடைமுறைப்படுத்தி திறப்பு விழா நடத்தும்போது மத்திய அரசின் அதிகாரிகளையோ, அமைச்சர்களையோ எந்த மாநிலத்திலும் அழைக்கப்படுவதில்லை. ஆனால், தன்னை அழைக்கவில்லை என்ற காரணத்தினால் உள் நோக்கத்தோடும், காழ்ப்புணர்ச்சியோடும் திறப்பு விழாவை நிறுத்தியுள்ளார் கிரண் பேடி. மேரி கட்டடம் கட்டப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசின் நிதி எங்கு உள்ளது என்பதை மக்களுக்கு கிரண் பேடி விளக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் இருந்து ஊதியம் வழங்குகிறோம். அதில் மத்திய அரசின் மானியமும் வருகிறது. அதனால் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மத்திய அதிகாரிகள் வந்துதான் ஊதியம் கொடுக்க வேண்டுமா ?

இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆளுநர் திட்டமிட்டு செயல்படுகிறார். அவர் கூறிய காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை. ஆளுநரின் செயல்கள் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது அவர் வகிக்கின்ற பதவிக்கு அழகல்ல. ஆளுநர் விரும்பினால் இவ்விழாவில் பங்கேற்கலாம் என்று நானும், முதல்வரின் நாடாளுமன்ற செயலரும் கூறியிருக்கிறோம். ஆனால், தேர்தல் வரும் நேரத்தில் காலதாமதம் செய்து திறப்பு விழாவை நிறுத்த வேண்டும் என்ற உள்நோகத்துடன் செயல்பட்டிருக்கிறார் கிரண் பேடி. மத்திய அரசுக்கு சம்மந்தமில்லாத ஒரு திட்டத்துக்கு அதிகாரிகளை அழைக்க வேண்டும் என்று கூறியிருப்பதை ஏற்க முடியாது.

ஆகவே, ஆளுநரின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த திட்டத்துக்கு மத்தியிலிருந்து எந்த நிதி வந்துள்ளது என்பதை கிரண்பேடி சொல்ல வேண்டும். இதில் மத்திய அரசின் நிதி ஒரு பைசா கூட கிடையாது. அதனால் கட்டட திறப்பு விழாவுக்கு ஆளுநர் தடை போட எவ்வித உரிமையும் இல்லை” என்றவரிடம், முதல்வர் நிவாரண நிதியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த தலைமைச் செயலருக்கு ஆளுநர் உத்தரவிட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “யார் விசாரித்தாலும் எனக்கு பிரச்னை கிடையாது.

கடந்த ஆட்சியைப் போல எங்களுடைய ஆட்சி கிடையாது. சம்பந்தபட்டவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவர்களிடம் காசோலை கொடுக்கப்படுகிறது. அதனால் இது தொடர்பாக எந்தவொரு விசாரணையும் வைக்கலாம். அதேசமயம் ஆளுநர் மாளிகைக்கு ரூ.7.8 கோடி ஒதுக்கியிருக்கிறோம். அந்த நிதியில் என்னென்ன செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்து முதலில் பகிரங்க விசாரணை நடத்துவோம். அதன்பிறகு மற்ற விசாரணைக்கு அவர் வரட்டும்” என்றார்.

Courtecy : ஜுனியர் விகடன்