புதுச்சேரி:
புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தில் தீர்ப்பு விவரங்களை ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்க முடியும் என சபாநாயகர் வைத்திலிங்கம் கூறி உள்ளார்.
இதன் காரணமாக உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும், பாஜக எம்எல்ஏக்கள் பணியாற்ற முடியாத சூழல் நீடித்து வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை சட்டமன்றத்துக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகியோருக்கு புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி நள்ளிரவு பணி நியமனம் செய்து வைத்தார்.
இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், அவர்களை எம்எல்ஏக்களாக ஏற்க முடியாது என்று சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்தார்.
இதையடுத்து, சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதி மன்றத்தில் நியமன எம்எல்ஏக்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாஜகவை சேர்ந்தவர்களை கவர்னர் நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்தது செல்லும் என்று நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.
இதன் காரணமாக 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களும் கவர்னர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில், நாளை மறுதினம் (26ந்தேதி) நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தில் தாங்களும் கலந்து கொள்வோம் என அறிவித்தனர்.
இந்நிலையில், நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் சபாநாயகர் அறைக்கு சென்று சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து பேசினர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் வைத்திலிங்கம், சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமான உத்தரவு எதுவும் நீதிமன்றத்தில் இருந்து எனக்கு இன்னும் வரவில்லை என்றார்.
என்னை சந்தித்த சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகியோர் தீர்ப்பு விவரத்தை என்னிடம் தெரிவித்தனர். அதன் நகல் வந்ததும் என்னிடம் தருவதாக தெரிவித்துள்ளர் என்றும், இந்த விஷயத்தில் நான் மட்டுமே எந்த முடிவும் எடுத்துவிட முடியாது. தீர்ப்பு விவரங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே எந்த முடிவும் எடுக்க முடியும்.”
இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் கூறி உள்ளார். இதன் காரணமாக நாளை மறுதினம் நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தில் 3 நியமன எம்எல்ஏக்களும் பங்குபெற முடியாத சூழல் நிலவி வருகிறது. இது புதுச்சேரியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.