சென்னை: புதுச்சேரியில் பாஜகவினர் 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமனம் சேய்த மத்தியஅரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பான மத்திய அரசின் உத்தரவு செல்லாது என அறிவிக்கப்படுமா? என    அரசியல் கட்சியினர் ஆவலோடு தீர்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த புதுவை சட்டமன்ற தேர்தலில் பாஜக என்ஆர்காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றது. 10 தொகுதிகளை கைப்பற்றிய என்ஆர் காங்கிரஸ் – பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்ற நிலையில், இதுவரை அமைச்சரவை பதவி ஏற்க முடியாத வகையில் அங்கு அரசியல் சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், ரங்கசாமி கொரோனா பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது,   புதுச்சேரி சட்டமன்றத்திற்கு கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை எம்,எல்.ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்காலிக சபாநாயகர் அவர்களுக்கு பதவி பிரமாணமும் செய்து வைத்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில்,  மத்திய அரசின் இந்த  உத்தரவுக்கு தடை விதிக் வேண்டும்த என்றும், இது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது, சட்டப்படி, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களை நியமித்துள்ளது தவறானது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த  மேமாதம் 20ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது,  விசாரணைக்கு வந்த போது, அரசுப் பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை உள்ளதாகவும், இவர்கள் நியமனத்தில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணனும் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த வழக்கில் இன்று பிற்பகலில் நீதிபதிகள் தீர்ப்பளிக்க உள்ளனர்.