புதுச்சேரி:

புதுச்சேரியில் உள்ள  சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வுக்கு நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் அக்கட்சியின்  சட்டமன்றக் குழுத் தலைவரும் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் தலைமையில் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் பாஸ்கரன் (முதலியார் பேட்டை தொகுதி), வையாபுரி மணிகண்டன் (முத்தியால் பேட்டை தொகுதி) அசனா (காரைக்கால் தொகுதி) ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் தங்களது ஆதரவு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கா அல்லது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கா என்பது குறித்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஏற்கெனவே இவர், அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட போது நேரில் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தற்போது சசிகலாவுக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பை கருத்தில் கொண்டு ஆதரவை தொடர்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் புதுவை எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அதனாலேயே இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அநேககமாக இவர்கள் ஒட்டுமொத்தமாக ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு அளிக்கக்கூடும்” என்று புதுவை அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.