ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சூர்யா சிங்கம் 3 படத்துக்கு விளம்பரம் தேடுகிறார் என்று கூறிய பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் சூர்யா ஏற்கனவே வெளியிட்ட அறிக்கை விபரம்:
பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக்கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு குறித்து பேசுவதற்குக் காரணமாக ஜல்லிக்கட்டு மாறியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுப்பிரச்னைகளுக்கு இளைஞர்களை ஒன்றுகூடிப் போராடத் தூண்டிய அனைவருக்கும் நன்றி.
தன்னெழுச்சியான போராட்டங்களில் எப்போதுமே உண்மை இருக்கும். பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நடந்து வருகிற ஜல்லிக்கட்டு. மாடுகளுக்கு எதிரானது என்று பொய்ப் பிரச்சாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்பு, மக்கள் மன்றத்தில் தோற்றுப்போயிருக்கிறது. நாட்டு மாடு இனம் அழிவதற்குத் துணைபோகிறவர்கள் ஜல்லிகட்டு மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
சட்டமும், ஆட்சியும் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. நமது விரல் எடுத்து நமது கண்களைக் குத்திக் கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது. அமைதியான வழியில் உரிமைகளை நிலைநாட்டப் போராடுகிற அனனவருக்கும் என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன். போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்.
மக்களின் போராட்டம் வெற்றி பெற்று ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றிபெற்றதாக நினைத்து அமைதியாகி விடக்கூடாது. நமது பண்பாட்டையும், அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் வந்தாலும், இதேபோல ஒன்றுபட்டு குரல்கொடுப்போம் என்று அறிக்கையில் கூறினார்.
இந்நிலையில், பீட்டா அமைப்பின் மூத்த அதிகாரியான நிகுஞ்ச் சர்மா சூர்யாவை விமர்சனம் செய்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சூர்யா, தன்னுடைய சிங்கம் 3 படம் வெளிவருகிற சமயத்தில் இந்தப் பிரச்னை குறித்து பேசுவது தற்செயல் அல்ல. சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் மற்றும் மனிதர்கள் என இருதரப்பிலும் இழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில் ஈடுபடுபவர்களுக்குத் தொடர்ந்து காயங்களையும் இறப்பையும் ஏற்படுத்தும் ஒரு குரூரமான விளையாட்டு, அதுவும் நாட்டின் உயரிய நீதிமன்றம் அதைத் தடை செய்தபிறகும், அதை முன்வைத்து படத்துக்கு விளம்பரம் தேடிக்கொள்வது தவறாக உள்ளது.
இதையடுத்து பீட்டா அமைப்புக்கும் நிகுஞ்ச் சர்மாவுக்கும் சூர்யா வக்கீல் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
சிங்கம் படம் ஏற்கெனவே இரு பாகங்களாக வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது. அதனால் நீங்கள் சொல்கிற மாதிரி கேவலமான முறையில் விளம்பரம் தேடிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. என் மீதான குற்றச்சாட்டு எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. என் மீதான குற்றச்சாட்டில் உள்நோக்கம் உள்ளது. எனது மதிப்பைக் குறைத்துள்ளது.
3000 வருடங்கள் பழமை வாய்ந்த தமிழ்க் கலாசாரமான ஜல்லிக்கட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ளேன். ஒரு தமிழனாக அப்படித் தெரிவிப்பது என் கடமை. வரலாறு காணாத போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றுவருகிறது. அதற்கு என் ஆதரவைத் தெரிவித்துள்ளேன். இந்தக் கடிதம் கண்டு ஏழு நாள்களில் மன்னிப்பு கேட்கவேண்டும். அதை ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.