டெல்லி: பொது போக்குவரத்து சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் திறக்கப்படலாம் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான லாக்டவுன் மார்ச் 25ம் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து நிறுத்தப்பட்டுள்ள பொது போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று உறுதி அளித்தார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ கான்பிரன்சிங் முறையில் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
சில வழிகாட்டுதல்களுடன் பொது போக்குவரத்து விரைவில் திறக்கப்படலாம். பேருந்துகள் மற்றும் கார்களை இயக்கும் போது சமூக விலகலை பராமரிப்பது, கை கழுவுதல், சுத்திகரிப்பு மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றார்.
ஆனால் பொது போக்குவரத்துக்காக சாலைகள் திறக்கப்படும் என்பதற்கான எந்த உத்தரவாதத்தையும் மத்திய அரசு இதுவரை அளிக்கவில்லை. ஆனால் பசுமை மண்டலங்களில், அரசாங்கம் ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.