சென்னை: புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை வெள்ளச்சேதத்தை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது, கிராம மக்கள் சேற்றை அள்ளி வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் பொன்முடியுடன் சென்ற அவரது மகனும், எம்.பி.யுமான கவுதசிகாமணி மற்றும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மீது சேறு வீசப்பட்டது. வெள்ளத்தில் தத்தளிக் கும் தங்களுக்கு குடிநீர் கூட இல்லை, எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்று கடும் கோபத்தில் இருந்த மக்கள், சாலையில் உள்ள சேற்று நீரை இறைத்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நோக்கி வீசி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதற்கிடையில் சாத்தனூர் அணை திறந்து விடப்பட்டதால், மேலும் வெள்ளத்தால் பல கிராமங்கள் சூழப்பட்டு உள்ளது. . இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். செஞ்சி, மேல்மலையனூர், வானூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகள், கடைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகப்பட்சமாக 51 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டிவனம் உள்பட பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மரக்காணம், கோலியனூர், நன்னாட்டம்பாயைம், பஞ்சமா தேவி, கல்பட்டு, பிடாகம், குச்சிப்பாளையம், பேரங்கியூர், நன்னாடு, பெரும்பாக்கம், காணை, மாம்பலப்பட்டு, காங்கேயனூர், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. அங்குள்ள மக்களுக்கு உணவு, தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். பல இடங்கள் குட்டி தீவு போல் காட்சியளிக்கிறது. மேலும் விளைநிலங்களில் மழைநீர் புகுந்துள்ளதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் மழை நீர் வெளியேறாததால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்ற முதல்வர் ஸ்டாலின் மேடான இடங்களில் மட்டும் ஆய்வு செய்துவிட்டு திரும்பிய நிலையில், அந்த மாவட்ட அமைச்சரான பொன்முடி இன்று அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்றார். அமைச்சர் பொன்முடி உடன் அவரது மகனும், முன்னாள் எம்பியுமான கவுதம் சிகாமணி, கலெக்டர் பழனி உள்பட அதிகாரிகள் குழு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வந்தனர்.
அப்போது பல பகுதிகளில் பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் வாக்குவாதம் செய்தனர். இந்த நிலையில், வெள்ளம் பாதித்த இருவேல்பட்டு பகுதியில் ஆய்வு செய்யச் சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்பியுமான கவுதம சிகாமணி, விழுப்புரம் கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகளை அக்கிராம மக்கள் உள்ளே வரக்கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் பேச முயன்றபோது, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது சாலையில் உள்ள சேற்றி வாரி இறைத்தனர். இது அவர்கள் மீது பட்டது. இதனால், அமைச்சர்களுடன் வந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் எற்படும் நிலை உருவானது.
உடனே காவல்துறையினர் தலையிட்டு, அமைச்சர் மற்றும் அதிகாரிகளை திருப்பி அழைத்துச் சென்றனர். பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணை திறந்ததே 4 மாவட்டங்கள் நாசமானதற்கு காரணம்! டாக்டர் ராமதாஸ்…