டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் மாதச்சம்பளம் பெறும் நபர் சிகிச்சைக்காக ரூ.5லட்சம் வரை கடன் பெறலாம் என பொதுத்துறை வங்கிகள் கூட்டாக அறிவித்து உள்ளது.
கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி ரூ.50 ஆயிரம் கோடி நிதியை அவசரகால மருத்துவ சேவைக்காக பொதுத்துறை வங்கிகளுக்கு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்து உள்ளது. இதையடுத்து, அனைத்து பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைந்து கொரோனா நோயாளிகளுக்கு கடன் வழங்கும்நடவடிக்கையாக ‘ பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.
2020-21ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் -24.37 சதவீதம் வரையில் சரிந்தது. இதன் பின்பு மத்திய நிதியமைச்சகம் தனது நிதிப் பற்றாக்குறை அளவை மறு ஆய்வு செய்து 9.5 சதவீதமாக அறிவித்தது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளதாகவும், நாடு முழுவதும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு பண புழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்திருந்தார்.
இந்தி நிதியைக்கொண்டு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை ஏற்படுத்த அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் (இ.சி.ஜி.எல்.எஸ்.) கீழ் ரூ.2 கோடி வரை அதிகபட்சம் 7.5 சதவீத வட்டியில் வழங்கப்படும் என்றும், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதை விரிவாக்கம் செய்ய விரும்பினால் அதிகபட்சம் ரூ.100 கோடி வரை வழங்கப்படும். கொரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க ரூ.50 ஆயிரம் கோடி நிதியை அவசரகால மருத்துவ சேவைக்காக ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்தது.
இதையடுத்து, பொதுத்துறை வங்கிகள் கொரோனா சிகிச்சை கடன் என தனி பிரிவை தொடங்கி, மாதச்சம்பளம் பெறும் நபரின் கொரோனா சிகிச்சைக்காக கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளன. அதன்படி,
தனி நபர்களின் கொரோனா மருத்துவ சிகிச்சைக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்
மாத சம்பளம் பெறுவோர் இதர பிரிவினர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரும் இத்தகைய கடன் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்
இந்த கடன் பெற எந்தவொரு பிணையும் (ஜாமின்) தேவையில்லை. கடன் வாங்கும் அவர் செய்யும் வேலைக்கான சான்றிதழ் இருந்தால் போதும், கொரோனா சிகிச்சை கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.