சென்னை: பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் கூறியுள்ளது. ஏற்கனவே பலமுறை, அரசு இடங்கள், பொதுஇடங்கள், நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், இன்று மீண்டும் கறாராக உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் மணிகண்டன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜோசப் ரெட்டியார் காலனியில் 15 அடி அகலமுள்ள பொதுப் பாதையை 5 அடி வரை ஆக்கிரமத்தி ஒரு குடும்பத்தினர் கட்டிடம் கட்டி வருகின்றனர். இதுதொடர்பாக நகராட்சியில் புகார் அளித்தும், இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை, கட்டுமானமும் நிறுத்தப்படவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நகராட்சி ஆணையர் தரப்பில் பொதுப்பாதையில் கட்டுமானம் மேற்கொள்வது தொடர்பான புகாரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டவுடன், கட்டுமான பணிகள் மேற்கொண்டு நடைபெறாமல் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கட்டிட அனுமதியை மீறி கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும், பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு மருத்துவர் மணிகண்டன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.