சென்னை:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், சென்னையில் மட்டும் 543 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியபோதே தமிழகத்தில் ஆங்காங்கே மர்ம காய்ச்சல் பரவியது. ஆய்வில் அவை டெங்கு என தெரிய வந்தது. மாநில அரசு டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.
ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்குபோல தமிழக அரசு மெத்தனம் காட்டி வந்தது. இந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவி, ஆயிரக்கணக்கானோரை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் சென்னையில் மட்டும் 543 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
சென்னையை அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் 272 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 173 பேரும் கோவையில் 159 பேரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 42 சுகாதார மாவட்டத்தில் 10 மாவட்டத்தில் 100-க்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.
சென்னை டெங்க வேகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறையின் அறிக்கை, அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கூறியுள்ள சென்னை மாநகராட்சி, கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க சென்னை முழுவதும் புகை அடிக்கப்படுகிறது என்றும், ‘அரசு மருத்துவமனை உள்பட பல இடங்களில் நிலவேம்பு கசாயம் வினியோகிக்கப்படுகிறது என்று கூறியுள்ளது.
டெங்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, டெங்கு கொசுக்கள் வீடுகளிலும், சுற்றுப்புறத்திலும் தேங்கியுள்ள நல்ல தண்ணீரில் இருந்து உருவாகிறது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தால் கொசுக்கள் உற்பத்தி ஆகாது. தண்ணீர் வைத்துள்ள குடம், பாத்திரம் போன்றவற்றை மூடி வைக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனை கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்படைந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆபத்தான நிலையில் யாரும் சிகிச்சை பெறவில்லை. அனைவரும் நலமுடன் உள்ளனர். தேவையான மருந்து மாத்திரைகள் கைவசம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.