சென்னை: மின் கட்டண உயர்வு தொடர்பாக சென்னையில் 22ந்தேதி பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதுபோல, மதுரை, கோவையிலும பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், மக்களிடையே கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்கப்பட இருப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. அதன்படி, சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 நகரங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும், மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குறை ஆணையம் அறிவித்து உள்ளது.
அதன்படி வரும் 16ஆம் தேதி கோவைஎஸ்.என்.ஆர். கல்லூரியிலும், வரும் 18ஆம் தேதி மதுரை தள்ளாக்குளம் லட்சுமி சுந்தரம் அரங்கிலும், வரும் 22ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கிலும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அங்கு பதிவு செய்யலாம். பொதுமக்கள் அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில் மின்சார ஒங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தவுடன் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.