சென்னை: தமிழக அரசு வரும் 26ந்தேதி காலை முதல் புதிய கொரோனா அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை, திருமணம், இறுதி ஊர்வலங்களுக்கு மேலும் கட்டுப்பாடு.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை.

கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு/திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்/இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, 50 நபர்கள் பங்கேற்புடன் நடத்திட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டு, பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக குடமுழுக்கு / திருவிழா நடத்த அனுமதி இல்லை.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.