கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் முக்கிய நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.

விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக் படங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

தமிழ்நாட்டுக்கு உழைத்த அரசியல் தலைவர்களின் படங்களை முதல் போஸ்டரில் வெளியிட்டார்கள். அதில் பெரியார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் படங்கள் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்து.

அடுத்து பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைப்போல வேட மிட்டவர்கள், ஒரு டீ கடை அருகில் அமர்ந்திருப்பதைப் போன்ற போஸ்டரும் கவனத்தை ஈர்த்தது.

மேலும், தமிழ்நாடு அரசியல் தலைவர் ஒருவர், தமிழே அறியாத ஒரு கவர்ச்சிப்பெண்ணுக்கு தனது கட்சிப் பெயரை சொல்லித்தருவது போலவும், ‘கட்சி பெயரே சொல்ல வரலை.. எப்படி சீட் வாங்கித் தருவது’ என்று கேட்பது போலவும் ஒரு ஸ்நீக்பீக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அடுத்த போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.

இந்நிலையில், படத்தினை அறிமுக இயக்குநர் ரா.பரமன் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ள, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் அறிவுஜீவிகளையும் உற்றுநோக்க வைத்தது.

படத்தின் நாயகர்களுக்குப் பதிலாக மக்களுக்காக உழைத்த சிங்காரவேலர், பாரதிதாசன், கக்கன், அயோத்திதாச பண்டிதர், ஜீவானந்தம், நெடுஞ்செழியன், இரட்டைமலை சீனிவாசன்,காயிதே மில்லத், அன்னி பெசண்ட் உள்ளிட்ட நிஜ நாயகர்களை போஸ்டரில் இடம்பெறச் செய்து முதல் படத்திலேயே ‘தெறம’ன் என்று சொல்ல வைத்துவிட்டார் இயக்குநர் ரா.பரமன்.

‘பப்ளிக்’ ஸ்னீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் சுவர் ஓவியம் இருக்க, அ.தி.மு.க. கொடி சாயலில் வரையப்பட்டுள்ளது. அருகே, ஒரு பெண் (ரித்திகா) சோகத்துடன் அமர்ந்திருக்கிறார்.

இந்த போஸ்டரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“எம்.ஜி.ஆர். மற்றும் அ.தி.மு.க.வை விமர்சிக்கும் படமாக பப்ளிக் இருக்குமோ” என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.
தவிர, படத்தின் டீசரில், “இந்தப் படத்துல வர்ற காட்சிகள் சம்பவங்கள் எல்லாமே நிஜம். யார் மனசாவது புண்பட்டா நாங்க பொறுப்பு கிடையாது” என்று இயக்குநர் ரா.பரமன் குரல் ஒலிக்கிறது.

ஆகவே பப்ளிக் அதிரடி அரசியல் திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.