சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், இன்றுமுதல 27 மாவட்டங்களில் கொரோனா நெறிமுறைகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே கடந்த வாரம் முதல் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகஅரசு மேலும் அளித்த தளர்வுகள் காரணமாக, இன்றுமுதல் மேலும் 23 மாவட்டங்களில் இன்றுமுதல் பேருந்துகள் இயங்குவதால்,மொத்தம் 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம் நடைபெற்று வருகின்றன.  இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.  தொற்று பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் முதலே  பொதுப்போக்குவரத்து, வழிபாட்டுத் தலங்கள் அடைக்கப்பட்டன. தொற்று பரவல் கட்டுக்குள் வந்தடைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் முதல்கட்டமாக  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி 24ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது மேலும் வழங்கப்பட்டுள்ள புதிய தளர்வுகள் காரணமாக இன்று முதல் மேலும்  23 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கியது.

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 27 மாவட்டங்கள் இடையே இன்று பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள மொத்தம் 19,290 பேருந்துகளில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2,200 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 365 பேருந்துகளும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2,210 பேருந்துகளும், சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 513 பேருந்துகளும், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,592 பேருந்துகளும், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,300 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1753 பேருந்துகள் என மொத்தமாக 9,333 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்தில் பயணம் செய்பவர்கள் முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள் நேற்றே கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு பயணத்திற்கு தயாரானது. இன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு தங்களின் இலக்குகளை நோக்கி பயணம் செய்து வருகிறது. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.