சென்னை

மிழக அரசு 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து மகிழ்ச்சியை அளித்தாலும் முன் கூட்டியே அறிவித்திருக்கலாம் என ஆசிரியர்கள் கூறி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.  அதன் பிறகு ஊரடங்கு காரணமாக மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் இந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது.  தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் பொதுத் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று திடீரென பொதுத் தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டு அனைவரும் பாஸ் என அறிவித்தது.   இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  ஆனால் மாறி மாறி வெளி வந்த அறிவிப்புக்களால் ஆசிரியர்கள் மிகவும் துயர் அடைந்துள்ளனர்.

பல ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணி புரிவதால் சொந்த ஊருக்குச் சென்றிருந்தோர் மீண்டும் பணி இடங்களுக்கு இ பாஸ் பெற்று வர வேண்டிய சூழல் உண்டானது.   விடுதிகள் இயங்காததால் அவர்கள் தங்க இடம் தேடி அலைய வேண்டிய நிலை உள்ளானது.  இத்தனை துயருக்கு பிறகு தற்போது தேர்வுகளை அரசு ரத்து செய்துள்ளது.

தமிழக மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த பக்தவத்சலம் என்னும் ஆசிரியர், ”தற்போது ஆசிரியர்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளாகி உள்ளனர்.  உதாரணமாக கிருஷ்ணகிரியில் இருந்து தேர்வு பணிக்காக வேலூர் வந்த ஆசிரியை ஒருவரைக் காவலர்கள் தனிமைப் படுத்தி உள்ளனர்.   மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இதை அறிந்து அவரை அழைத்து வந்துள்ளார்.

இது போல் பல ஆசிரிய ஆசிரியைகள் ஆங்காங்கே சொந்த ஊரில் இருந்து பணி புரியும் ஊருக்குத் திரும்பி வந்து விட்டு மீண்டும் எப்போது பள்ளி திறக்கும் என்பது தெரியாததால்  சொந்த ஊருக்குச் செல்ல உள்ளனர்.  தேர்வு ரத்து மகிழ்ச்சியை அளித்தாலும் முன்கூட்டியே அறிவிக்காமல் தாமதமாக முடிவு எடுத்தது எங்களுக்கு மிகுந்த சிரமம் அளித்துள்ளது.” எனத் தெரிவித்தார்.