சென்னை: நீட் தாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்து கூறலாம் என தமிழகஅரசு அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. கிராமப்புற ,நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ,தமிழ் வழியில் கல்வி பயில்வோர் போன்றோரின் மருத்துவக் கனவு பொய்யாகி வருகிறது. இதையடுத்து, ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றதும், தமிழ்நாட்டின் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்துள்ளது.
இந்த குழுவினர் நீட் தேர்வினால் மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா ? என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் வரும் 23ம் தேதிக்குள் அஞ்சல் வழியாகவோ, neetimpact2021@gmail.com என்ற இமெயில் வழியாகவோ தங்களது கருத்துக்களை அனுப்பலாம் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி தெரிவித்துள்ளது.
நீட் தேர்வின் தாக்கம் பற்றி ஆராயும் குழுவில் டாக்டர்கள் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.