முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் கோடிக்கணக்கில் சொத்து குவித்துள்ளதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

இந்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் மட்டுமன்றி ஊடகங்களிலும் பெரிதாக பேசப்பட்டது.

அண்ணாமலை வெளியிட்ட இந்த ஆடியோ குறித்து நிதி அமைச்சர் பி.டி.ஆர். இன்று விளக்கமளித்துள்ளார்.

“இந்த ஆடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் மேற்கொள்ளப்பட்ட முழுக்க முழுக்க போலியான ஆடியோ” என்று கூறிய அவர் “அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இதேபோன்ற தொழில்நுட்பத்தில் இதற்குமுன் வெளியான போலி வீடியோக்களே இந்த தொழில்நுட்பம் எந்தளவுக்கு மக்களை ஏமாற்ற பயன்படும் என்பதற்கு சான்று” என்றும் கூறியுள்ளார்.

“நான் பேசியதாக கூறி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அண்ணாமலை இதுவரை நான் யாருடன் பேசினேன் என்று அவரோ அல்லது என்னிடம் பேசியவர்களோ தெரிவிக்கவில்லை என்பதே இது மோசடி வேலை என்பதற்கு சான்று.

ஆதாரமற்ற போலியான ஆடியோவை வெளியிடும் அளவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரம் தாழ்ந்துள்ளது மிகவும் வேதனையளிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“தங்களது அரசியல் எண்ணத்தை நிறைவேற்ற இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் மூலம் களங்கம் சுமத்த நினைப்பவர்களின் பிளாக் மெயில் போன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது” என்றும் கூறியுள்ளார்.

ஏப்ரல் 14 ம் தேதி தனது ரபேல் வாட்சுக்கான மளிகை கடை சீட்டு போன்ற ஒன்றை வெளியிட்டு விமர்சனத்துக்கு உள்ளான அண்ணாமலை மீது தற்போது போலி ஆடியோ வெளியிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.