சென்னை

மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்த சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அதன்படி அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை கே கே நகரில் உள்ள புகழ்பெற்ற பள்ளியான பத்மா சேஷாத்ரி பள்ளியில் ராஜகோபாலன் என்பவர் ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார்.  இவர் ஆன்லைன் வகுப்புக்களின் போது தனது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார்கள் எழுந்தன.  இதையொட்டி பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து மாணவிகளும் அவர்கள் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.  இது குறித்து மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கப் பாண்டியன், தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்,

இந்நிலையில் ஆசிரியர் ராஜகோபாலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிபதி அப்துல் பாரூக் முன்பு ஆஜர்படுத்தபட்டார்.  அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அப்துல் பாரூக் உத்தரவு இட்டார்.   அதன்படி  ஜூன் 8ஆம் தேதி வரை அவர்  புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்.