புதுடில்லி:
பினாமி பண  பரிவர்த்தனை தடுப்பு திருத்த மசோதா, பாராளுமன்ற மேலவையில் நிறைவேறியது.

1988ல் கருப்பு பணத்தை தடுக்க பினாமி பண  பரிவர்த்தனை தடுப்பு மசோதா சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் செய்து மீண்டும் நேற்று மேலவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் அருன் ஜேட்லி திருத்தப்பட்ட  சட்டத்தை தாக்கல் செய்தார்.
நீண்ட விவாதத்துக்குப் பின், அந்த மசோதா நிறைவேறியது.
பினாமி சட்டம் குறித்து அருண் ஜெட்லி கூறியதாவது: கணக்கில் வராத பணத்தை வைத்துள்ள சிலர், பெய்யான பெயரில் பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்கவே பினாமி சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தை மேலும் கடுமையாக்கும் வகையில், பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
பழைய சட்டத்தில், ஒன்பது பிரிவுகள் மட்டுமே உள்ளன; ஆனால் புதிய சட்டத்தில், 71 பிரிவுகள் இடம் பெறுகின்றன.
பழைய சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம், மூன்றாண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தற்போது, அது, ஏழாண்டு சிறை தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது.
பல்வேறு மத அமைப்புகள் பெயரிலும், கடவுளின் பெயரிலும் சொத்துக்கள் உள்ளன. இதுபோன்ற மத அமைப்புகளுக்கு, விலக்கு அளிக்கும் சட்டப் பிரிவும், இந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில், இந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி, மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.