அகதிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டம்…. ஏழு மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பால் அடி பணிந்தது மத்தியஅரசு…
‘’அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்’’ என்ற முதுமொழி அசாம் உள்ளிட்ட 7 மாநில மக்களின் போராட்டம் மூலமாக உண்மையாகி இருக்கிறது.
முத்தலாக் சட்டம்,உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு என ஒவ்வொரு விஷயத்தையும் தேர்தல் வெற்றிக்கான ஆயுதமாக எடுத்து மடியில் சொருகிக்கொண்ட மோடி அரசு-
அண்மையில் இன்னொரு ஆபத்தான ஆயுதத்தை கையில் எடுத்தது.
அது-
குடி உரிமை சட்ட திருத்த மசோதா.
இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருக்கும் அசாம்,அருணாச்சல பிரதேசம்,மிசோரம்,மேகாலயா, நாகலாந்து,மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய பிராந்தியங்கள் வட கிழக்கு மாநிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
மத துவேஷம் காரணமாக அண்டை நாடுகளான பாகிஸ்தான்,பங்களா தேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த பல லட்சம் பேர் இந்த மாநிலங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் முஸ்லிம் அல்லாத அனைவருக்கும் இந்திய குடிஉரிமை வழங்க -இந்த சட்ட திருத்த மசோதா வழி வகுக்கிறது.
இந்துக்கள்,கிறிஸ்தவர்கள்,சீக்கியர்கள்,ஜெயின், பார்சி சமூகத்தினர் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.
மக்களவையில் இந்த மசோதா கடந்த மாதம் 8 ஆம் தேதி நிறைவேறி விட்டது. மாநிலங்களில் நிறைவேற்றப்படுவதற்கு காத்திருக்கும் இந்த மசோதாவுக்கு 7 வட கிழக்கு மாநில மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி கொண்டிருக்க- அங்குள்ள கட்சிகளும் அவர்களுக்கு துணையாக உள்ளன.
இவர்களில் 7 கட்சி தலைவர்கள் பா.ஜ.க.கூட்டணியில் அங்கம் வகிப்போர் என்பதால் பா.ஜ.க.தலைமை கவலை அடைந்துள்ளது.
இந்த மசோதா இந்துக்கள்,கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோரின் வாக்குகளை பா.ஜ.க.பக்கம் திருப்பும் என்று அந்த கட்சியின் தேசிய தலைவர் அமீத்ஷா நம்புகிறார்.
ஆனால்- மசோதாவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அசாம் மாநில பா.ஜ.க.அரசு.அசாம் இயக்க போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகள் குடும்பத்தினருக்கு விருதுகள் வழங்கி இருந்தது. அவர்களில் 76 பேர் விருதை திருப்பி கொடுத்துவிட்டனர்.
மணிப்பூரை சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குநர்-அரிபம் ஷியாம் சர்மா.இவருக்கு 2006 ஆம் அண்டு மத்தியஅரசு பத்ம விருது அளித்தது.குடிஉரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சர்மா –தனக்கு அளிக்கப்பட்ட விருதை ஞாயிற்றுக்கிழமை திருப்பி அனுப்பி விட்டார்.
இப்படியாக போராட்டங்கள் தொடர்வதால்- அமீத்ஷா நேற்று அதிரடியாக-‘’மசோதாவை நிறைவேற்றுவதில் அவசரம் காட்ட மாட்டோம்”என்று அறிவித்துள்ளார்.’’ அனைவரும் ஒப்புக்கொண்டால் மட்டுமே மசோதா நிறைவேற்றப்படும் ‘’ என்றும் அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
இதன் மூலம் மாநிலங்களவையின் நடப்பு கூட்டத்தொடரில் மசோதா நிறைவேறாது.
மக்களின் எழுச்சியை கண்டு மோடி அரசு பணிந்திருப்பது அநேகமாக இதுதான் முதன் முறையாக இருக்கும்.
–பாப்பாங்குளம் பாரதி