டெல்லி: உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதையடுத்து டிவிட் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் இளைஞர்கள் எந்தக் களத்தையும் கைப்பற்ற முடியும் என்பதற்கு பிரக்ஞானந்தா ஓர் உதாரணம், அவரை நினைத்து பெருமை கொள்கிறேன் என வாழ்த்தியுள்ளார்.
அஜர்பைஜானில் அண்மையில் நடந்த உலகக் கோப்பை செஸ் தொடர் ஓபன் பிரிவில் உலகன் நம்பர் ஒன் வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ல்சனுடன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் பிரக்ஞானந்தா விளையாடி இருந்தார். இந்த போட்டியின் காலிறு, அரையிறு வெற்றி பெற்ற கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டியில் தோல்வியுற்றார். இதனால் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தொடர்ந்து உலக ரேபிட் டீம் சாம்பியன்ஷிப்பில் பிரக்ஞானந்தா விளையாடிய WR அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதையடுத்து தமிழ்நாடு திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு தமிழகஅரசுசார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பிரக்ஞானந்தா வாழ்த்து பெற்றார். அப்போது முதல்வர் ஸ்டாலின் ரூ.30 லட்சத்துக்கான ஊக்கத் தொகையை வழங்கினார்.
இந்த நிலையில், பிரக்ஞானந்தாவை நேரில் பாராட்ட பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, பிரக்ஞானந்தா தனது பெற்றோருடன் டெல்லி சென்ற பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பு குறித்து பிரக்ஞானந்தா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் , “மரியாதைக்குரிய பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்தது பெருமையாக இருந்தது. என்னையும், என் பெற்றோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக பேசிய உங்களுக்கு எனது நன்றி” என தெரிவித்துள்ளார்.
பிரக்ஞானந்தாவின் இந்தப் பதிவிற்குப் பதில் அளித்து பாராட்டியுள்ள பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் “உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்துகிறீர்கள். இந்தியாவின் இளைஞர்கள் எந்தக் களத்தையும் கைப்பற்ற முடியும் என்பதற்கு நீங்கள் ஓர் உதாரணம் பிரக்ஞானந்தா. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.