சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த ஒரு வாரமாக  டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள், ஆசிரியையகளை இன்று அதிகாலை காவல்துறை யினர் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ, ஜியோ போன்ற அமைப்புகள்  மவுனம் காத்து வருவது ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஊதிய முரண்பாடுகளை சரிசெய்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 7 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மயக்கம் உள்ளிட்ட உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்த பின்னரும் போராட்டத்தில் பங்கெடுத்து வந்தனர். ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவு கொண்டு வரவேண்டும் என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளான  அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து,  சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ்  ஆலோசனை நடத்தினார். துறை செயலர் காகர்லா உஷா, இயக்குநர் அறிவொளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை ஏற்க முடிவு செய்யப்பட்டது. ‘பகுதிநேர ஆசிரியர்களின் மாத தொகுப்பூதியம் ரூ.2,500 வரை உயர்த்தி வழங்கப்படும். ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு 3 மாதத்தில் அறிக்கை அளிக்கும். ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு உயர்த்தப்படும்’ என்று அமைச்சர் தெரிவித்தார். ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆனால், இதை ஏற்க மறுத்த இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோர் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். அரசு தரப்பு பல முறை ஆசிரியர்களுடன் பேச்சுவாரத்தை நடத்தியது. எனினும் சுமூக உடன்பாடு ஏற்படாததால் இரவு பகலாக ஆசிரியர்கள்  இன்று 8 வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்களும் பகுதி நேர ஆசிரியர்களும் கூறினர்.

இந்j நிலையில்,  இன்று அதிகாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் டிபிஐ வளாகத்தில்  குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை அதிரடியாக கைது செய்தனர். இதனிடையே கைதாக மறுத்து தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று பேருந்தில் ஏற்றி சென்றனர். அப்போது போலீசாருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் ஆசிரியர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது.

பின்னர்  அவர்களை பேருந்தில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர். இதனால் டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் அதன் அருகே உள்ள சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். ஆசிரியர்களை குண்டுகட்டாக  தூக்கிச் சென்று காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் 10 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டு புதுப்பேட்டை சமூக நலக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் என்றால், அனைத்து சங்கங்கங்களும் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக கொந்தளிப்பது வாடிக்கையான நடவடிக்கை. மக்கள் நலம் குறித்து கவலைகொள்ளாமல், தங்களது நலனை மட்டுமே முன்னிறுத்தி போராடுவார்கள். இதுதான் தமிழ்நாட்டில் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.. ஆனால், இந்த சமவேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு ஊழியர் சங்கங்ங்களோ, மேலும் மற்ற ஆசிரியர் சங்கங்கள்,  முதுநிலை ஆசிரியர் சங்கங்களோ நேரடியாக சென்று ஆதரவோ மற்றும் அவர்களுக்கு ஆதாரவாக போராட்டத்தில் கலந்துகொள்ளாத நிலை,  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

எதற்கெடுத்தாலும் போர்க்கொடி தூக்கும் ஜாக்டோ, ஜியோ போன்ற தொழிற்சங்கங்களும், கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்களும் வாய்மூடி மவுனம் காப்பது  சமுக ஆர்வலர்கள், கல்வியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுக்கொண்டு  ஏழைகளுக்கு  அரசு வழங்கும் இலவச பேருந்துகள்  சேவையை பயன்படுத்தி சொகுசாக பணிக்கு வந்து செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சக  ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காதது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.