சென்னை,

த்திய அரசின் பாராமுகத்தை கண்டித்து மத்திய அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை முடக்கியத்தில் பாதியஜனதா தலையீடு உள்ளது என்றும் கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகம் கடும்  வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்ட மாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், வார்தா, புயல் காரணமாக தமிழகம் மிகப் பெரிய பேரழிவை சந்தித்துள்ளது.  இதன் காரணமாக, வறட்சி நிவாரண தொகை யாக ரூ.39,000 கோடி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால், மத்திய அரசோ, வெறும்  2,000 கோடி மட்டும் ஒதுக்கி இருக்கிறது. இது  கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மத்திய அரசின் பாராமுகத்தை கண்டித்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்றார்.

மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவார் என்றும்,  இரட்டை இலை யாருக்கு கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, நாங்கள் இரட்டை இலையை எதிர்த்துதான் போட்டியிடுகிறோம் என்றார்.

அதிமுகவின் சின்னமான  இரட்டை இலையை முடக்கம் செய்ததில் பா.ஜனதா தலையீடு உள்ளது. இதுகுறித்து,  நான் ஏற்கனவே மோடியின் கையில்தான் இரட்டை இலை உள்ளது என்றேன்.

இதுகுறித்து, இரட்டை இலையை சசிகலா அணிக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வக்கீல் வாதாடியது கட்சியின்  கொள்கை முடிவல்ல. அது தொழில் ரீதியான முடிவு.  இதன் காரணமாக தமிழக தேர்தலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.