சென்னை:

மிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், போராட்டம் அறிவித்துள்ள அரசு மருத்துவர்களிடம், தமிழக சுகாதாரத்துறை செயலர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்து உள்ளது. இதன் காரணமாக நோயாளிகள் சிரமத்தை சந்திக்கும் சூழல் உருவாகி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள்  பணி அனுபவத்துக்கு ஏற்ப ஊதியம் வழங்குதல், நோயாளிகளின் வருகைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமித்தல், 50 சதவீத இடஒதுக்கீடு, பட்டமேற்படிப்புக்கான முறையான கலந்தாய்வு நடத்துதல் என   4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 1ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற 6 வார கால அவகாசம் கோரியது.

ஆனால், அரசு  அவர்களின் கோரிக்கை மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று முதல்  கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து,  சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் களிடம் மருத்துவக் கல்லூரி இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றார். ஆறு பேர் கொண்ட மருத்துவர்கள் குழு தலைமைச் செயலகம் வந்து, சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேசை சந்தித்தனர். இரு தரப்பினருக்கும் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தங்களது போராட்டம் தொடரும் என அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக டெங்கு அதிகளவில் பரவி வரும் நிலையில், தற்போது பருவமழை காரணமாக வைரஸ் காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், அரசு மருத்து வர்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும் சிகிச்சை கிடைக்குமா என்று அவநம்பிக்கையுடன் உள்ளனர்.