லக்னோ: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, குடியுரிமை சட்டத்திருத்தம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து, உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கேஸ் சிலிண்டர்களை சட்டமன்றத்திற்கு எடுத்துவந்து போராட்டம் நடத்தினர். இதனால், அவையில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
சட்டமன்றத்தில் ஆளுநர் ஆனந்திபென் படேல் உரை நிகழ்த்த தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவர்களில் பலர் கைகளில் பதாகைகளை வைத்திருந்தனர்.
அதில் குடியுரிமை திருத்தச் சட்டம், என்ஆர்சி மற்றும் என்.பி.ஆருக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ள நிலையில், சில சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்கு சிலிண்டரை எடுத்து வந்து போராட்டம் நடத்தினர். இந்த காட்சிகளை தனது இருக்கையில் இருந்தவாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
சட்டமன்றத்திற்கு வெளியேயும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போராட்டம் நீடித்தது. சில காங்கிரஸ் உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து ரிக்சா ஓட்டுனர்களுக்கு தக்காளிகளை வழங்கினர்.