சென்னை: விவசாயிகள் 7 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய அதிமுக பொதுச்செயலாளரான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலஅரசை எதிர்த்து போராடுபவர்களையும், கருத்து தெரிவிப்பவர்களையும், காவல்துறையை கொண்டு, கைது செய்து விமர்சனங்களை ஒடுக்கி வருகிறது. இந்த நிலையில், திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்த காவல்துறையினர், முதன்முறையாக 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சியுள்ளனர். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு விவசாயிகள் போராடி வருகின்றனர். செய்யாறு அருகே அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட்டுக்காக 3300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை கைது செய்த காவல் துறையினர் 7 விவசாயிகள் முடுது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தில் சிப்காட் 3-வது அலகை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசு மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் 125 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 விவசாயிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி:
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத் திற்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை ‘சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்’ என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான அரசாணையை திமுக அரசு பிறப்பித்துள்ளது.
இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும், அப்பகுதிகளில் வசிக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள் கடந்த சில மாதங்களாக அறப் போராட்டத்தைக் கையிலெடுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயப் பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4.10.2023 அன்று அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பங்கெடுக்கும் விவசாயிகளுடைய தீவிரத்தைக் குறைக்க வேண்டும்
என்றும், அவர்களுடைய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க வேண்டும் என்றும், அந்தப் பகுதிகளில் இருக்கக் கூடிய இளைஞர்கள் மீதும், விவசாயப் பெருங்குடி மக்கள் மீதும் திமுக அரசு தொடர் வழக்குகளை பதிவு செய்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வழக்குகளைக் காரணம் காட்டி, எந்தவிதமான முன்வழக்குகளும் இல்லாத விவசாயிகள் மீது தொடர் வழக்குகளைப் பதிவு செய்துள்ளதோடு, தற்போது 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்புக் காவலை திமுக அரசு போட்டிருக்கிறது. மேல்மா கூட்டு ரோடு, கூழமந்தல் போன்ற பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போட்டிருக்கக் கூடிய முள் வேலிகளைப் போல, அங்கே முள் வேலிகளைக் கொண்டுவந்து தடுப்புகளை அமைத்து, பெரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வஜ்ரா வாகனங்களையெல்லாம் கொண்டுவந்து நிறுத்தி, விவசாயப் பெருங்குடி மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இந்த அரசு முயல்கிறது.
அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கும், அரசு ஊழியர்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்குவதற்கும், தங்கள் விவசாய நிலங்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் வேளாண் பெருங்குடி மக்கள் நியாயமான அகிம்சை வழியில் போராடி வருவதை ஒடுக்குவதற்கும், திமுக அரசு காவல் துறையை தொடர்ந்து பயன்படுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது. விவசாயப் பெருங்குடி மக்கள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
அமுமக தலைவர் டிடிவி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க பணிகளுக்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. விவசாயிகளை சமூகவிரோதிகள் போல சித்தரித்து அவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டிருப்பதோடு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது ஜனநாயகத்திற்கு முரணானது.
எனவே, நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெற்று, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க முடிவை கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, இதற்கு மேலும் திமுக அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எங்கள் எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர்.
திமுக அரசின் இந்த செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். திமுக அரசிடம் இருந்து, போராடும் விவசாயிகளை பாதுகாக்க அவர்கள் குடும்பங்களுக்கு முழு ஆதரவையும் சட்ட உதவியையும் தமிழக பாஜக வழங்கும் என்ற உறுதியை அளிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறவழியில் போராடும் மக்கள் மீது அதிகாரத்தைக் கட்டவிழ்க்கும் மக்களாட்சி முறைக்கு எதிரான போக்கினைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்துவதனை விட்டுவிட்டு வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இல்லையேல், நாம் தமிழர் கட்சி மீண்டும் களமிறங்கி மக்களை இணைத்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், திமுக கூட்டணி கட்சிகளான பாமக, தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி உள்பட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.