சென்னை,
ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வணிகவரித்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 61 சங்கங்களைச் சேர்ந்த சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என்றும், , புதிய ஊதிய மாற்றம் செய்யப்படும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், காலமுறை ஊதியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட6 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இது குறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்த்தின் மாநில பொதுச் செயலாளர் அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வேலை நிறுத்தம் தொடர்பாக அரசுக்கு முறையாகப் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அரசு இது குறித்து எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை. மேலும், அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்தும் எந்தவிதமான ஆலோசனையும் நடத்தவில்லை.
இந்நிலையில் நேற்று முதல் தொடங்கியிருக்கும் போராட்டம் மற்றும் கோரிக்கைகள் குறித்து அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் .
அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த முன் வரவில்லையெனில், அடுத்தகட்ட போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.