மார்ச் 8ம் தேதி உலகெங்கும் பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில், “ஆண்களை அடிமைப்படுத்தாதே” என்கிற முழக்கங்களுடனும், பதாதகைகளுடனும் ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தது.
ஆர்ப்பாட்டததை நடத்தியது, “தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம்”.
இச்சங்கத்தின் தலைவரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான அருள்துமிலனிடம் பேசினோம்.
அவர், “ தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரி 10000 ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தங்கள் மனைவியின் கொடுமையால் இந்த முடிவுக்கு வருவாத தகவல்கள் வெளியாகின்றன.
பெண்களால் ஆண்கள் கொடுமைப்படுத்துவதாக ஒரு நம்பிக்கை, எண்ணம் பலரிடம் இருக்கிறது. அதே போல பெண்களால் ஆண்கள் கொடுமைப்படுத்துவதும், தற்கொலை வரை செல்வதும் நடக்கிறது. இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்.
மனைவியும் அவளது கள்ளக்காதலனும் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயற்சிக்க.. ரத்தக்காயத்துடன் அவர் காவல்நிலையத்துக்கு ஓடினால், மனைவிதானே அடித்தாள் போ என்று விரட்டுவதும் நடக்கிறது.
ஆண்களை அடிமையாக பெண்கள் நடத்துவது பரவலாக நடக்கிறது. அருவெறுக்கத்தக்க வகையில் பேசுவது, கணவன் உழைத்து சம்பாதித்த வீட்டை பிடுங்கிக்கொள்வது, ஜீவனாம்சம் என்ற பெயரில் அவனது வருமானத்தையே எடுத்துக்கொள்வது போன்ற கொடுமைகள் நடக்கின்றன.
கள்ளத்தொடர்பு குறித்த வழக்கில் ஆண் மட்டுமே தண்டிக்கப்படுகிறான். ஆகவே இது குறித்த இந்திய தண்டனை சட்டம் 497 –ல் மாற்றம் செய்து, தவறு செய்யும் இருவரும் தண்டிக்கப்படும்படி செய்ய வேண்டும்.
வரதட்சணை, குடும்ப வன்முறை சட்டப்படி புகார் அளிக்கப்பட்டால், அவற்றை பெண் காவல் அதிகாரிகளே விசாரிக்கிறார்கள், இவர்கள் ஒரு சார்பாக செயல்படுவதால் ஆண்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆண்களை பெண் காவலர்கள் மோசமாக நடத்துவதும் தொடர்கிறது. ஆகவே, பெண்களை விசாரிக்கும்போது பெண் காவலர் இருக்க வேண்டும் என்பதுபோல, . ஆண்களை விசாரிக்கும்போது ஆண் காவலர் இருக்க வேண்டும் என்கிற விதியை உருவாக்க வேண்டும்.
ஆண்களின் நலனுக்காக, தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்.
இதுபோன்று ஆண்களின் பாதுகாப்புக்காக ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் தினமான இன்று ஆர்ப்பாட்டம் செய்கிறோம்” என்று தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கதலைவர் வழக்கறிஞர் அருள்துமிலன் தெரிவித்தார்.
மேலும், “மக்கள் மத்தியில் ஆண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தெரியவேண்டும் என்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.
பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்த, போராடிய பெரியார், பாரதியார், பாரதிதாசன் இன்று இருந்திருந்தால் அவர்கள் ஆண்களின் நிலையை அறிந்து வருத்தப்பட்டு ஆண்களுக்காக குரல் கொடுத்திருப்பார்கள்” என்று சொல்லி முடித்தார் அருள்துமிலன்.
ஆர்ப்பாட்ட வீடியோ: