ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிர போராட்டம்…… 38 பேர் விடுவிப்பு

Must read

சென்னை:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் விரிவடைந்ததை தொடர்ந்து அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட 38 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி அலங்காநல்லூரில் நேற்று இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். 21 மணி நேரமாக நள்ளிரவு வரை போராட்டம் நீடித்தது. அதிகாலையில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றினர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் திருமண மண்டபலங்களில் தங்க வைப்பட்டனர்.

இளைஞர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே அணி அணியாக பொதுமக்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான பேர் திரண்டதால் மீண்டும் அங்கு பதட்டமும், பரபரப்பும் நிலவியது. மதுரை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி நேரில் வந்து பேச்சு நடத்தினர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். வழக்கும் பதிவு செய்யாமல் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். விடுவிக்கப்படுவார்கள் என்று எஸ்.பி அளித்த வாக்குறுதியை மக்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது

இதனிடையே, அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கரூர் சுங்ககேட், பகுதியில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலங்காநல்லூரில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடந்தது. கோவை கொடிசியா அரங்கம் அருகே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்தது. ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் சரபோஜி கல்லூரிமாணவர்களும் போராட்டம் நடத்தினர். இதேபோல் திருச்சி, சேலம், ஆத்தூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களிலும் போராட்டம் வெடித்தது. இதனால் தமிழகம் முழுவதும் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 38 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மதுரை எஸ்.பி. விஜயநேந்திர பிதாரி தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதான் கைது செய்துள்ளோம். மற்றவர்களையும் விடுவித்தால் தான் நாங்கள் கலைந்து செல்லோம் என்று போராட்ட குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article