சிவன் மலை

நடக்கப்போகும் விசயத்தை முன்கூட்டியே அறிந்துகொள்வதென்றால் யாருக்குத்தான் ஆசை இருக்காது?

அப்படி முன்கூட்டியே சொல்லும் வல்லமை படைத்தது சிவன்மலை.

சிவ வாக்கிய சித்தர் பூஜித்த மலை தான் சிவன்மலை. கொங்கு நாட்டின் சிங்க நகரான காங்கயத்திற்கு அருகில் காங்கயம்-திருப்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த சிவன்மலை.

இந்த மலை மீது கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு, பட்டாலிமலை என்று வழங்கப்பட்டதாம். பிறகு, அங்கு வந்து சித்தர் சிவவாக்கியர் முயற்சியில் திருப்பணிகள் நடந்தன.   அதன் பிறகு இந்த மலை சிவன் மலை என்று பெயர் பெற்றதாம்.

இன்னொரு தகவலும் உண்டு.  அக்காலத்தில் இந்த மலையை சுற்றி பசுக்கள் சூழ்ந்தும் மேய்ந்தும் வர வளம் பெற்றுள்ளது. பசுக்களை சேய் என்று கூறுவது தமிழ் வழக்கில் உள்ளது. இதனால் சிவனின் சேயான குகன் வந்து அமர்ந்து அருள்பாலிப்பதால் சேமலை என்று அழைக்கப்பட்டது. கால சுழற்சியில் அது சிவன்மலை என மருவியதாம்.

கொங்கு பகுதி மக்களுக்கு இந்த சிவன்மலைதான் எல்லாமே. இது குறித்து இவர்கள் சொல்வதாவது:

“சிவன் மலை என்றாலும், இங்கு வீற்றிருக்கும் முருகன்தான் எங்கள் செல்லமான தெய்வம். திடீரென யாரேனும் ஒரு பக்தரின் கனவில் வந்து, தான் விரும்பும் ஒரு பொருளை சொல்வார். அந்த பொருளை, கோயிலில் இருக்கும் பெட்டியில் வைப்போம்.

கோயில்

அந்த காலகட்டத்தில் அந்த பொருளால் மிகப்பெரிய நன்மையோ, தீமையோ ஏற்படும். அதாவது தண்ணீரை வைக்கச் சொல்லி உத்தரவு வந்தால், அந்த காலகட்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். அல்லது பஞ்சம் தீர்ந்து பெருவெள்ளம் ஏற்படும்.

அப்படி ஒரு முறை தண்ணீரை வைக்கச்சொல்லி உத்தரவு வந்தபோதுதான் சுனாமி ஏற்பட்டது.

அடுத்து மஞ்சள் வைக்கச்சொல்லி உத்தரவு வந்தது. அந்த நேரத்தில்தான் மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு மார்க்கெட்டில் விற்பனையானது.

முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து மண் வைத்து பூசை செய்ய உத்தரவு வந்தது. அப்போதிலிருந்து  இந்த பகுதியைச் சுற்றி நிலத்தின் மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது.

அதன்படி இப்போது இரும்புச் சங்கிலியை வைத்து வழிபடச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது.  இதையடுத்து சிவன்மலை கோயிலில் இரும்புச்சங்கிலி இன்று வைக்கப்பட்டது” என்று கூறும் கொங்கு பகுதி மக்கள், அடுத்து சொல்வதுதான் பகீர் செய்தி:

ஆண்டவன் உத்தரவு

“இரும்புச் சங்கிலி வந்திருப்பதால், நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள்.. அதாவது அரசியல், சினிமா, விளையாட்டு என்று புகழின் உச்சத்தில் இருப்பவர்கள் வழக்குகளில் சிக்கி, கைது செய்யப்படுவார்கள்” என்று பகீர் கிளப்புகிறார்கள்.

இன்னும் சிலர், “பொதுவாகவே நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கும். ஆகவே கைது படலங்களும் அதிகமாகும்” என்று பீதி கிளப்புகிறார்கள்.