சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையால் சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது என சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவை இன்று கூடியதும், கேள்வி நேரத்தைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் 100 விதியின்கீழ் தமிழக முதலீடு குறித்த அறிக்கை வாசித்தார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் சொத்து வரி உயர்வு குறித்து கேள்வி எழுப்பினர்.
சொத்து வரி உயர்வை தமிழ்நாடு அரசு கைவிட சட்டப்பேரவையில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு உயர்த்திய சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசினார். சொத்து வரி சற்று குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செல்வ பெருந்தகை கூறினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை என்றும் உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் பற்றாக்குறையில் உள்ளதால், சொத்து வரி உயர்த்த வேண்ய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வளர்ச்சித் திட்டங்கள் தேக்க நிலையை அடைந்துள்ளது.
இதனால்,. மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் பற்றாக்குறையால் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றக்கூட சிரமம் ஏற்பட்டது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவடைந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்கு திட்டங்கள் வகுத்து அரசிடம் நிதியை எதிர்பார்ப்பார்கள். எனவே, அடித்தர, ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காமல் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சியை மனதில் கொண்டு சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் முதல்முறையாக, கட்டட பரப்பளவை அடிப்படையாக வைத்து சொத்து வரி நிர்ணயம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நகர்புறத்தில் உள்ள குடியிருப்புகளில் பொருளாதார அடிப்படையில் பார்த்தால் சொத்து வரி உயர்வினால் 83% மக்களுக்கு பாதிப்பு இல்லை என்பதே உண்மை. மாநிலத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஆதாரம் தேவை. எனவே, சொத்துவரி உயர்வு தவிர்க்க முடியாதது என்று கூறினார்.
மேலும், இந்த விஷயத்தில், கட்சி வேறுபாடின்றி நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அனைத்துக் கட்சிகளும் துணை நிற்க வேண்டும். மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்ய வேண்டாம் என்று எதிர்கட்சித் தலைவர் மட்டுமின்றி அனைத்துக் கட்சியினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறினார்.
இதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.