சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13லட்சம் வீடுகளுக்கு சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சொத்து வரி உயர்வு தொடர்பாக ஜூன் மாதம் ஒவ்வொருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வருவாய்த் துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும், வருவாயை பெருக்க சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 1ந்தேதி முதல் சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளது. குறைந்த பட்சம் 25சதவிகிதம் முதல் அதிகபட்சமாக 150 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதை கண்டுகொள்ளாமல் சொத்து வரி உயர்த்துவதிலேயே கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.
இதைதொடர்ந்து, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 13 லட்சம் வீடுகளுக்கு சொத்துவரி உயர்வு உயர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மாநகராட்சி பகுதியில் குடியிருப்புகளுக்கு 600 சதுர அடி வரை 50 சதவீதமும், 601 முதல் 1200 சதுர அடி கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1201 முதல் 1800 சதுர அடி கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், 1800 சதுர அடி மேல் உள்ள கட்டிடங்களுக்கு 150 சதவீதமும் சொத்து சரி உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு 100 சதவீதமும், குடியிருப்பு அல்லாத பகுதிகளுக்கு 150 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வரி விதிக்கப்பட்ட பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு 50 சதவீதமும், முந்தைய சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், திரையரங்குகளுக்கு புதிய முறையில் கட்டிடத்தின் பரப்பளவு, அடிப்படை தெரு கட்டணம் அடிப்படையில் சொத்து வரி விதிக்கப்பட்டு உள்ளது. காலி மனைக்கு 50 பைசாவாக இருந்த சொத்து வரி சதுர அடிக்கு ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்வது குறித்து பொது மக்களிடம் ஆட்சேபனை கருத்தினை கேட்டு அறிவிப்பாக வெளியிட்டது. அறிவிப்பு வெளியிட்ட 30 நாட்களுக்குள் ஆட்சேபனையை தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதற்கான கால அவகாசம் கடந்த 11-ந் தேதி யுடன் நிறைவு பெற்றது. 50-க்கும் குறைவான ஆட்சேபனை கடிதங்கள் வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து சொத்து வரி உயர்வு குறித்து மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 30-ந்தேதி நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து சொத்து வரி உயர்வு குறித்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. இதற்கான பணி ஜூன் மாதம் நடைபெறும் என தெரிவித்து உள்ளது.
அதைத்தொடர்ந்து, 2022-23 முதல் அரையாண்டிற்கான சொத்துவரி விவரம் முழுமையாக தெரிவிக்கப்படும். அதன்படி சொத்து வரி வசூலிக்கும் பணி தொடங்கப்படும் என மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.