சென்னை: சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் 25% முதல் 150% வரை சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்க, மத்திய அரசின் 15வது நிதி ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. அத்துடன் சொத்து வரி பல ஆண்டுகளாக மாற்றமில்லாமல் இருப்பதால், வருவாய் குறைந்து, உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் , மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.
தமிழகஅரசின் நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சொத்து வரி உயர்வுக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய பம்பர் பரிசுகள் காத்திருப்பதாக கிண்டல் அடித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
இதுகுறித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி களில் சொத்துவரி 150% வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்வு நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில், மாநகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரவிருக்கிறது. இது நியாயமற்றது என்று பதிவிட்டுள்ளார்.
டிடிவி தினகரன்
இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழகம் முழுவதும் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தியிருக்கிற திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதான் நீங்கள் தமிழக மக்களுக்கு தரப்போவதாக சொன்ன விடியலா?
கொரோனா பாதிப்புக்குப் பிறகு முழுமையான இயல்புநிலை இப்போதுதான் ஏற்படத்தொடங்கி இருக்கும் நிலையில், இப்படி ஒவ்வொன்றாக மக்கள் தலையில் இடி விழுவது போல் அறிவிப்புகளை வெளியிடுவது மனசாட்சி இல்லாத செயல். எனவே, சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
சீமான்:
சொத்து வரி உயர்வு குறித்த கேள்விக்கு பதில் தெரிவித்தவர், அதற்குத்தானே நீங்கள் அவர்களை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறீர்கள் என்று கூறினார். எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது. இன்னும் நான்கு ஆண்டுகள் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும் என்றார்.