பினாமி பெயரில் சொத்து: 7 ஆண்டு ஜெயில்! மத்திய அரசு

Must read


டில்லி,
பினாமி பெயரில் சொத்து பதிவு செய்திருந்தது தெரியவந்தால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 8தேதி இரவு பிரதமர் மோடி, கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்க ரூ.500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து கருப்பு பணம் வைத்துள்ளவர்களை மத்திய வருமான வரித்துறையினர் வேட்டையாடி வருகின்றனர்.
வங்கிகளில் இருந்து பணம் எடுக்கவும் டெபாசிட் செய்யவும் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் அடுத்த அதிரடியாக பினாமி சொத்துக்கள் தொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராக வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து பினாமி சொத்துக்கள் தொடர்பாக கடுமையான சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரி கூறியதாவது,
பணம் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, பணம் கொழிக்கும் தொழிலான ரியல் எஸ்டேட் குறித்து கண்காணிக்க தொடங்கி உள்ளது. இதற்காக  கடுமையான விதிகளுடன் பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச்சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தப்போவதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த ஜூலை மாதம்  வரை தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கின் அடிப்படை யிலும், வங்கி பரிவர்த்தனைகள் அடிப்படையிலும் சந்தேகப்படும்படியான ரியல் எஸ்டேட் சொத்துக்கள் பற்றிய தகவல்களை நாடு முழுவதும் சேகரிக்கும் பணியில் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது என்றார்.
பினாமி சொத்து பரிவர்த்தனை சட்டத்தின் அடிப்படையில் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டால், அவருக்கு  7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் பினாமி சொத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும்,  அதற்கான சட்டத்தை மேலும் கடுமையாக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ற்கனவே 1988ல் இருந்து நடைமுறை யில் இருந்த பினாமி தடுப்புச் சட்டம் 1988-ஐ மாற்றி, புதிய சட்டமான பினாமி தடுப்பு திருத்தல் சட்டம் 2016ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது.
பினாமிகள் பெயரில் நிலங்கள் பதிவு செய்யப்படுவதை  தடுக்க, ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில், 1988 ம் ஆண்டில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது; அந்த 1988 பினாமி தடுப்புச் சட்டத்தில் மொத்தமே 9 பிரிவுகள் மட்டுமே இருந்தன.
ஆனால், தற்போது புதிய திருத்த சட்டத்தில் மொத்தம் 71 பிரிவுகள் உள்ளன. அந்த 1988 சட்டப்படி, யாரும் பினாமி பெயரில் சொத்து வாங்க கூடாது என்றும், அவ்வாறு வாங்கினால், அதை அரசு எடுத்துக் கொள்ளும் என்றும், நான் பினாமியாக வாங்கிய சொத்து, அந்த சொத்து எனக்குத் தான் சொந்தம் என்று நீதிமன்றத்தில் வழக்குப் போட முடியாது என்று கூறப்பட்டது.
ஆனாலும், ஒருவர், தன் மனைவி, மைனர் மகன், திருமணமாகாத மகள் இவர்கள் பெயரில், அவர்களின் வருங்கால நன்மைக்காக, இவரின் பணத்தைக் கொண்டு, அவர்கள் பெயரில் சொத்தை பினாமியாக வாங்கி வைக்கலாம்; அப்படி வாங்கி வைப்பது சட்டப்படி தவறு ஆகாது; ஆனாலும், அந்தச் சொத்தை வாங்கியவர், எனக்குத்தான் சொந்தம் என்றும், நான்தான் பினாமியாக என் மனைவி பெயரில் வாங்கினேன் என்று திரும்ப அந்தச் சொத்தை வாங்க முடியாது;
பழைய 1988 சட்டத்தில், பினாமி சொத்துகளை அரசு எடுத்துக் கொள்வதில் சரியான வரைமுறை செய்யப்படவில்லை; எனவே சொத்தை அரசு பறிமுதல் செய்வதில் குளறுபடி இருந்தது; பினாமியாக சொத்து வைத்திருந்தால் 3 ஆண்டு சிறை என்றும் இருந்தது; இருந்தும், 1988 – ன்படி கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அந்தப் பழைய 1988 சட்டத்துக்கு புத்துயிர் கொடுத்து இந்த 2016 புதிய திருத்தல் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜி சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இந்தப் புதிய சட்டத்தில் பினாமி பரிவர்த்தனை புரிவோர்க்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். அதிகபட்சமாக 7 ஆண்டுகள் ஜெயில் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article