சிவகங்கை: தேவர் குருபூஜை, மருது சகோதரர்களின் குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 31ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
சிவகங்கையில் 27-ம் தேதி மருது சகோதரர்களின் குருபூஜை, 30-ம் தேதி முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெறும் நிலையில், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் சிவகங்கையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு வரும் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அக்டோபர் 30ந்தேதி தேவர் குருபூஜை
தேவர் குருபூஜை விழா வருடம்தோறும் தமிழ்நாட்டிலுள்ள இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், அக்டோபர் மாதம் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116ஆவது ஜெயந்தி விழாவும் 68 ஆவது குரு பூஜை விழாவும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய 3 தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி, ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன், மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களிலும் தேவர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெறும். தேவர் குருபூஜையையொட்டி, அவரது நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன்னுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக தலைவர்கள் நேரில் வந்து மரியாதை செலுத்துவது வழக்கம். இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது
தென் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகங்களான தேவர்களுக்கும் தேவேந்திர குல வேளாளர்களுக்கும் இடையே நீண்ட காலமாக ஒரு மோதல் போக்கும் பதற்றமான சூழலும் நிலவி வந்தது. இமானுவேல் சேகரன் குருபூஜையின் போதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையின் போதும் அசம்பாவிதங்களோ கலவரங்களோ நடந்து விடக் கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்,. இதையொடடி சிவகங்கை உள்பட சில பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 27ந்தேதி மருது பாண்டியர் நினைவு தினம்
தமிழ் மண்ணில் இருந்து ஆங்கிலேயர்களை விரட்டி மீண்டும் வேலுநாச்சியாரை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்த சிங்கங்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில்.
தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள் மருது சகோதரர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது.
இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 டிசம்பர் 15ல் மகனாகப் பிறந்தவர் பெரிய மருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். இருவரும் சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர்ப்படையில் வீரர்களாகச் சேர்ந்து தமது திறமையை நிரூபித்தனர். இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய மன்னர் முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புக்களில் நியமித்தார்.
ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப் படை 1772ல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பின் உடனடியாகச் சிவகங்கை மீது போர் தொடுத்தது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.1772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆற்காட்டு நவாப், தொண்டைமான், கும்பினியார் ஆகியோரின் படைகளை வெற்றி கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர்.
இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார். வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28ல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்து, மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின் தான் நின்றது. 1801 அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது ஆங்கிலேய அரசு. இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.
வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் பிரின்சு ஆப் வேல்சு (இன்றைய பினாங்கு) நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர். மருது சகோதரர்களின் முழு உருவ கற்சிலைகள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் காளீஸ்வரர் கோயிலின் உட்புறமும், மருது சகோதரர்களின் சமாதி காளீஸ்வரர் கோயிலின் எதிர்ப்புறமும் அமைக்கப்பட்டுள்ளன.மருது சகோதரர்களின் படம் கொண்ட அஞ்சல் தலை இந்திய அரசால் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் வெளியிடப்பட்டது. இவர்களை சிறப்பிக்கும் வகையில் இவர்களது நினைவிடத்தில் குருபூஜை விழா மூன்று நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மருது பாண்டியர் நினைவு தினம், குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது. 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.