சென்னை:
மிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மாநில அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என கூறி தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தயும் பாடாய்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 3வது முறையாக ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக, மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையைச் சேர்ந்த, ஆர்.தனசேகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில்,  இந்தியாவில், 33 லட்சம் பேர், மது குடித்ததால் இறந்துள்ளனர். இவர்களில், 18 லட்சம் பேர், தமிழகத்தை சேர்ந்தவர்கள். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்து வதாக, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட போதும், அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை. தற்போது   ஊரடங்கு காரணமாக மதுக் கடைகள் மூடப்பட்ட போதிலும், கள்ளச்சாராய விற்பனை இல்லை எனவும், குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், மது பழக்கத்தை, பலரும் கைவிட்டு வருவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ஊரடங்கு முடிந்த பின்னும், மனு கடைகளை திறக்கக் கூடாது என, உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை  வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாரயணா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாரயணன், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்ற தலையிட முடியாது என்று தெரிவித்தார். மேலும், எங்கெல்லாம் மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும், தமிழத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.