மயிலாடுதுறை,
நதிகளை இணைத்து பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்க அரசுகள் திட்டமிடும்ம் உண்மையை கூறியதால் தன் மீது தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் விளைநிலங்களில், ஓ.என்.ஜி.சி தனது எண்ணெய்க் குழாய்களைப் பதித்துள்ளது. இதை எதிர்த்து பேரசிரியர் ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே ஓ.என்.ஜி.சி. குழாய்களில் திடீரென தீ பிடிப்பதும் அவ்வப்போது நடந்துவருகிறது.
இந்த நிலையில் போராட்டம் நடத்திய ஜெயராமன் உள்ளிட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்கள்.
இந்நிலையில் பேராசிரியர் ஜெயராமன் எழுதிய “நதிகள் இணைப்பு திட்டம் : ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா” என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை மயிலாடுதுறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக பேராசிரியர் ஜெயராமன் பேசியதாக இந்திய தண்டனைச் சட்டம் 153(1)(b) என்ற பிரிவின் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்மீதான வழக்கை சட்டரீதியில் சந்திக்கப் போவதாக ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
மேலும், “அந்த நிகழ்ச்சியில் தான் இந்திய ஒற்றுமைக்கு எதிராக எதுவும் பேசவில்லை. இன்றைய காலகட்டத்தில் நீர் நிலைகளை மக்கள், இளைஞர்கள் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்றே பேசினேன்.
ஆண்டாண்டு காலமாக மக்களுக்கு சொந்தமாக இருந்த ஆறுகளை எல்லாம் பன்னாட்டு முதலாளிகளின் முதலீட்டில் இணைத்துவிட்டு அந்த முதலாளிகளிடமிருந்து நமது மக்கள் காசு கொடுத்து வாங்கும் திட்டம்தான் ஆறுகள் இணைப்புத்திட்டம். இதை அம்பலப்படுத்தி எழுதிய என்னை பாராட்டியிருக்க வேண்டும், ஆனால், மக்கள் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
நீ ஏன் உசுப்பி எழுப்புகிறாய் என்று என்மீது தொடர்ந்து வழக்குப் போடுகிறார்கள். இந்த வழக்கு என் கருத்துரி மைக்கு எதிரான வழக்கு. இதை சட்டப்படி எதிர்கொள்வோம். இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பது யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எங்களை போன்ற எழுத்தாளர்கள் மீது அல்லது சிந்தனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த கருத்துரிமை போரை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று ஜெயராமன் தெரிவித்துள்ளார்.