வாடகையைக் குறையுங்கள்.. கலங்கவைக்கும் கெஞ்சும் புராணம்..
இப்போ பெரிய பிரச்னையா ஓடிட்டு இருக்கிறது வீட்டு வாடகை தான். வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு, வருமானம் இழப்புன்னு மத்தியதர வர்க்கம் கடுமையான பொருளாதார நெருக்கடில சிக்கி என்ன செய்றதுன்னு தெரியாம தவிச்சுட்டு இருக்கு. ஆனா வீட்டு வாடகை தவிர்க்கவே முடியாத ஒரு விசயமாச்சே. அதனால முடியாத பல வாடகைதாரர்களின் ஒரே கோரிக்கை, வாடகை தள்ளுபடி அல்லது வாடகை குறைப்பு.
“மார்ச் மாசம் வரைக்கும் வாடகை ஒழுங்கா வந்திடுச்சு. அதுக்கப்புறமா தான் பிரச்னை. வாடகையை தள்ளுபடி பண்ண சொல்லி, குறைச்சுக்க சொல்லி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. டைம் வேணா குடுக்கலாம். ஆனா குறைக்கிறதோ, தள்ளுபடிக்கோ வாய்ப்பே இல்லை. இதை வாங்கி தான் நான் EMI கட்டணும். எனக்கு வேற இதர வருமானம் ஏதுமில்ல” என்கிறார் சென்னையில் இரண்டு அபார்ட்மென்ட்களை வாடகைக்கு விட்டிருக்கும் சத்குரு சஹால்.
ஆனா சந்தீப் சாகர்ங்கிற நுலாம்பூரை சேர்ந்த ஐடி ஊழியரோ, “சம்பளத்தில ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கட் பண்ணிட்டாங்க. இந்த சூழலில் வாடகையை குறைச்சுக்க சொல்லி எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் எங்க ஹவுஸ் ஓனர் ஒத்துக்கவே இல்ல. டைம் வேணா தரேன். ஜூலைக்குள்ள குடுக்க பாருங்கனு சொல்லிட்டாரு. எப்டி சமாளிக்கப்போறேன்னே தெர்ல” என்று புலம்புகிறார்.
குடுத்த அட்வான்ஸ் திருப்பி கிடைக்காமல் போயிடுமோங்கிறது தான் இப்போதைக்கு வாடகைதாரர்களின் பெரும் கவலை.
ஒலிம்பியா டவர்ஸின் மேனேஜிங் டைரக்டர் அஜித் குமார், “எங்ககிட்டயும் ஒரு சிலர் வாடகை தள்ளுபடி பத்தி கேட்டாங்க. ஆனாலும் இதுவரை எல்லாரும் சரியான டைமுக்கு வாடகையை குடுத்துட்டாங்க. ஒரு சில ஷாப் ஓனர்ஸ் தான் வியாபாரம் இல்லாததால் வாடகை கட்ட முடியாம போராடிகிட்டு இருக்காங்க. ஆனாலும் எங்க ஆளுங்க தொடர்ந்து ஃபோலோ பண்ணிட்டு தான் இருக்காங்க. கொஞ்சம் டைம் வேணா கொடுக்கலாம்” என்கிறார்
20%-க்கும் அதிகமானோர் வாடகை குறைப்பு அல்லது தள்ளுபடி கேட்பதாக ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
“வேலையில்ல, சம்பளமில்லனு எங்ககிட்ட வந்து புலம்புறாங்க, கேட்கிறாங்க. ஆனா நாங்க கட்ட வேண்டிய EMI-லருந்து எங்களுக்கு எந்த ரிலாக்சேசனும் இல்லியே. அதான பிரச்னை” என்கிறார் TNRERA ஏஜன்ட் மோகன்.
வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் இருவருமே அடுத்து என்ன செய்வது என்கிற குழப்ப சூழலில் இருக்கும் இந்த நேரத்தில் அரசு இதில் தலையிட்டு ஏதாவது புதிய திட்டங்களை அறிவித்து இந்த சிக்கலை களைய உதவ வேண்டும் என்பதே துறை வல்லுனர்களின் கோரிக்கை.
– லெட்சுமி பிரியா