சென்னை: தமிழகத்தில், ரசாயன உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் பெருநிறுவன தொழிற்சாலைகள், குறைந்தளவு ஊழியர்களுடன் தொடர்ந்து இயங்கி வருவதாக தொழில்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து விபத்து நிகழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கேள்வி எழுந்ததால், இவ்வாறு தெரிவித்தனர் அதிகாரிகள்.
தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது; ரசாயனத் தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்படக் கூடியவை. இவற்றை நிறுத்தினால் பெரிய சிக்கல்கள் ஏற்படும் என்று ரசாயன தொழிற்சாலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன. மத்திய அரசும்கூட, ரசாயனத் தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கியது. தமிழகத்தில் ரசாயனத் தொழிற்சாலைகள், குறைந்த அளவு தொழிலாளர்களுடன் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இதனால், எந்த பாதிப்பும் கிடையாது என்றனர்.
மேலும், ரசாயனத் தொழிற்சாலைகள் சங்கத்தின் சார்பில் கூறப்பட்டதாவது; தொடர்ந்து செயல்பட்டாக வேண்டும் என்ற பிரிவின் கீழ்வரும் ரசாயனத் தொழிற்சாலைகள், தமிழகத்தில், 40க்கும் அதிகமாக உள்ளன. இவை, சென்னை, துாத்துக்குடி, கடலுார், ராணிப்பேட்டை ஆகிய சிப்காட் தொழிற்பூங்காக்களில் ஊரடங்கு நாட்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
மருந்து தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள், உரம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றுக்கு ரசாயன தொழிற்சாலைகள் இயங்குவது கட்டாயம். அதேசமயம், இரண்டாம் கட்டத்திலுள்ள சிறிய அளவிலான ரசாயனத் தொழிற்சாலைகள் செயல்படவில்லை. அவைகளும் செயல்பட அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.