சென்னை
அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய இருவருக்கும் தமிழக பாஜக தலைவர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்று (11-04-2025) பகல் 2 மணி முதல் மாலை 4 வரை தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவர்கள், விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான எம்.சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் பா.ஜனதா தேசிய தலைமை தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக பா.ஜனதா மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடைபெற உள்ளது.
பா.ஜனதா மாநில தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், ‘எப்’ படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். 3 பருவம் தீவிர உறுப்பினராகவும், குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர்கள் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவர்.
கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், 10 பேரிடம் இருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள், படிவம் ‘இ’-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன் மொழிய, மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் காரணமாக, தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மாநில தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அண்ணாமலை கடந்த 2018-ம் ஆண்டும், நயினார் நாகேந்திரன் 2017-ம் ஆண்டும் பா.ஜனதாவில் சேர்ந்தார்கள். புதிய தலைவர் போட்டிக்கு 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால், இருவருக்கும் தேர்தலில் போட்டியிட சிக்கல் இருந்து வருகிறது.
இருப்பினும், மாநில தலைவர் தேர்தலில் போட்டியிட யார் வேண்டுமென்றாலும் விருப்ப மனுத்தாக்கல் செய்யலாம் என்றும், விதிகளை தளர்த்துவது குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் என்றும் தமிழக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.